கர்நாடகாவில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் செல்லாததால், துவக்கப் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கர்நாடகா எல்லை பகுதியில், பாலாறு, கோபிநத்தம், ஆத்தூர், புதூர், ஆலம்பாடி, ஜம்புரூட்டு, மாறுகொட்டாய் உள்பட, ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில், பாலாறு தவிர, இதர கிராமங்களில், 90 சதவீதத்துக்கும் மேல் தமிழர்களே வசிக்கின்றனர்.
கோபிநத்தம் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி, ஆத்தூர், புதூர், ஜம்புரூட்டு, ஆலம்பாடி, மாறுகொட்டாய் பகுதியில் துவக்கப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில், தமிழர்களின் குழந்தைகளே அதிக அளவில் படிக்கின்றனர். கர்நாடகாவின் எல்லையில் இந்த பள்ளிகள் உள்ளதால், ஆசிரியர்கள் பெரும்பாலோர் பணிக்கு செல்ல தயங்குகின்றனர்.
அரிதாகவே ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததால், மாணவர்களின் கல்வி பாதித்தது. விரக்தியடைந்த பெரும்பாலான பெற்றோர்கள், காவிரியின் மறுகரையில் உள்ள ஒகேனக்கல் பகுதியில் உள்ள தமிழக பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இதனால், ஆலம்பாடி, மாறுகொட்டாய், ஜம்புரூட்டு ஆகிய இடங்களில் இயங்கிய துவக்கப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
கோபிநத்தம், ஆத்தூர், புதூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன. இதனால், வசதியற்ற பெற்றோர்கள், குழந்தைகளை ஒகேனக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் தவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...