குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,472 பேருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான 6,695 பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினர்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 முதல் நேர்காணல் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு, நேர்காணலில் வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வுகள் அடங்கிய பதவிகளுக்கான 3,472 விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, அக்டோபர் 15 முதல் 20 வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உரிய படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
முதல் கலந்தாய்வு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய அலுவலகம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்துக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கட்டடம் கட்டப்பட்ட பிறகு மிகப்பெரிய அளவில் நடைபெறும் முதல் கலந்தாய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் அல்லாத 3,220 பதவிகளுக்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.