உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.
பள்ளிக்கல்வித் துறையில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலை, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், சமீபத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
இதற்கிடையே, தேர்வில், 20க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் குறித்து, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பி., வெளியிட்ட விடை மட்டுமில்லாமல், வேறு விடைகளும், குறிப்பிட்ட கேள்விகளுக்கு பொருந்துவதாக கூறி, அதற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கில், தேர்வுப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதலில் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன்படி, டி.ஆர்.பி., 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ரத்து செய்துள்ளது. புதிய பட்டியலை தயாரிப்பதற்காக, 30, 31 தேதிகளில், 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: ஒரு இடத்திற்கு, இரண்டு பேர் வீதம், 6,282 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வருகின்றனர். இவர்களில், 3,063 பேர், ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, அவர்கள், 30, 31ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தேவையில்லை.
பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள, 3,219 பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். நவம்பர் 10ம் தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தேர்வில், 23 கேள்விகளுக்கு, இரு விடைகள் சரியாக பொருந்துகின்றன. இதற்கு தகுந்தார்போல், விடைகளை மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...