ஜூலை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ல் துணைத் தேர்வை நடத்துவது என்றும், மேலும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணியிலிருந்து 3 மணி நேரமாக நீட்டிப்பது என்றும் கல்வித் துறை முடிவு செய்தது.
இதனை எதிர்த்து சென்னை சூளையைச் சேர்ந்த அ.யாமினி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஜூலையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் பி.எட். பட்டம் பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளோம். ஆனால், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் யாமினி கூறியிருந்தார்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த ஏ. விஜயராஜ் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். ஜூலை தேர்வில் வெற்றி பெற்ற 2,448 பேரையும் நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்வில் ஒட்டுமொத்தமாகப் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் தங்களுக்கான பிரத்யேகப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தகுதித் தேர்வு வெற்றியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நேரடி நியமனம் வழங்கக் கூடாது. ஆசிரியர் நியமனத்துக்கான மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று விஜயராஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ். நாகமுத்து விசாரணை நடத்தினார். மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் டி. அருண்குமார், எம். ரவி ஆகியோரும் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், அரசு வழக்குரைஞர்கள் என். சக்திவேல், ஆர். ராஜேஸ்வரன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
விசாரணையின்போது அரசு சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜூலை தேர்வுக்குப் பின்னர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி பெற்ற புதிய விண்ணப்பதாரர்களையும் அக்டோபர் தேர்வில் அனுமதிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24 முதல் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், ஆசிரியர் நியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பதில் மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து நீதிபதி நாகமுத்து வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
அரசின் இந்த முடிவுகளால் இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் முடித்து வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கு சரியான ஆலோசனை கூறி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கண்ட அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியனை நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...