பணியில் இருக்கும்போது மகன் இறந்ததால், அவரது தாயாருக்கு, குடும்ப பென்ஷன் வழங்க மறுப்பது நியாயமில்லை' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னைத் துறைமுகத்தில், ரவிகுமார் என்பவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். 2006ல் அவர், திடீரென இறந்தார். திருமணமாகாத அவர், தாயார் மாரியம்மாளுடன் வசித்து வந்தார்.
உரிமை உண்டு:மகன் இறந்ததும், ஓய்வூதியத்தை தவிர, மற்ற பணப் பலன்கள், மாரியம்மாளுக்கு வழங்கப்பட்டன. மகனை மட்டுமே அவர் சார்ந்து இருந்ததால், ஓய்வூதியம் கேட்டு, சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத்துக்கு, மாரியம்மாள் நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதால், அதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான, பியூலா ஜான் செல்வராஜ், "இறந்த ஊழியரின் பெற்றோருக்கு, ஓய்வூதியம் பெற, துறைமுக விதிகளில் இடமில்லை என்றாலும், மகனை மட்டுமே சார்ந்திருந்த தாய்க்கு, ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது' என, வாதாடினார்.
சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், பட்டேல், "இறந்தவரின் தாய்க்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க, ஓய்வூதிய விதிமுறைகளில் இடமில்லை' என்றார்.
மகனின் கடமை...:இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மகனின் வருமானத்தைச் சார்ந்தே, மனுதாரர் இருந்துள்ளார். பெற்றோர் நலன் மற்றும் மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டப்படி, வயதான பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை, அவர்களின் வாரிசுகளுக்கு உள்ளது. எனவே, ஒரு மகனுக்கு, தன் பெற்றோரை கவனிக்க வேண்டிய சட்டப்பூர்வ பொறுப்பு உள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, உயிருடன் இருக்கும் வரை, தன் தாயை, ரவிகுமார் கவனித்துள்ளார். குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம், உதவியற்ற பெற்றோருக்கு, பணப் பாதுகாப்பு அளிப்பது தான். இறந்தவரின் தாயார் என்ற முறையில், ஓய்வூதியம் பெற, மாரியம்மாளுக்கு உரிமை உள்ளது.அவருக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் மறுப்பது நியாயமற்றது. எனவே, ஆறு வாரங்களுக்குள் மாரியம்மாளுக்கு, ஓய்வூதியத் தொகையை, பாக்கி இல்லாமல், சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...