தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆன்-லைன் மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.
பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்வேறு துறைகளில், தேர்வுத்துறை மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உட்பட, ஆண்டுக்கு, 40 தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை தரும் பெரும் பணியை, இத்துறை செய்து வருகிறது.
இத்துறையில் உள்ள பிரச்னைகளை, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ எவரும் கண்டுகொள்ளாததால், நாளுக்கு நாள், ஊழியர்கள் மத்தியில் புகைச்சல் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில், இயக்குனரகத்தில், 250 பேர் பணியாற்றி வருகின்றனர். இன்னும், 250 பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்திற்குள் இருந்தது.
இப்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.5 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர். ஆனால், இப்போதும் பணியாளர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக, காலிப் பணியிடங்கள், ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், அரசுப் பணிகளில் சேர்வோரின் பள்ளிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அனுமதி வழங்கும் பணி, தேர்வுத்துறையிடம் உள்ளது.
பல்வேறு அரசுத் துறைகளில் இருந்தும், பல்கலைகளில் இருந்தும், சான்றிதழ்கள் பண்டல் பண்டலாக வருகின்றன. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்படாமல் அப்படியே, முடங்கிக்கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனரகத்தில், 54 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கோ, அதிகரித்துள்ள தற்போதைய பணிகளுக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தவோ, அதிகாரத்தில் உள்ளவர்கள் அக்கறை காட்டுவதில்லை என, ஊழியர்கள் வருத்தப்படுகின்றனர்.
பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், இளநிலை உதவியாளர்களை நிரப்ப கேட்டுள்ளோம்.
தேர்வுத்துறையின் பல்வேறு பணிகளை, "ஆன்-லைன்&' மூலம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதனால், வரும் ஆண்டுகளில், ஊழியர்களின் பணிப்பளு படிப்படியாக குறையும். சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, அந்தந்த கல்வி நிறுவனங்கள், தேர்வுத்துறையின் இணையதளத்திலேயே பார்ப்பதற்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு இயக்குனர் கூறினார்.
ஊழியர் பற்றாக்குறையை சரிகட்ட, தினக்கூலி அடிப்படையில், ஓய்வுபெற்ற ஊழியர், 40 பேரை, இயக்குனரகம் நியமித்தது. இவர்களுக்கு, தினச்சம்பளம் வெறும், 200 ரூபாய். இவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், அவர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...