தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா கூறினார். கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான தொடக்கப்பள்ளிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மண்டல கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பேசியதாவது: ஆண்டுக்கு 4 செட் இலவச சீருடைய வழங்கும் திட்டத்தில் துணியின் தரத்தை ஆய்வு செய்து தரமில்லாதவற்றை திரும்ப ஒப்படைக்கவேண்டும். டிசம்பருக்குள் இலவச சீருடை வழங்கவேண்டும். முப்பருவமுறையில், அடுத்த பருவத்திற்கான புத்தகங்கள் விரைவில் வினியோகிக்கவேண்டும். இந்தியாவில் முதல் முறையாக கல்வி மேலாண்மை தகவல் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் செயல்பாடு, மாணவர்களின் கல்வி கற்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். பாட புத்தகங்கள் கல்வி விவர திட்டத்தில் குறிப்பிடப்படும். மாணவர் நலன் கருதியே ஆசிரியர் வருகை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டு வரப்படும். ஆங்கில வழி கல்வி வந்தால் தனியார் பள்ளியில் இருந்து அதிக மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பள்ளிக்கு வராத குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்கவேண்டும்.
இவ்வாறு சபீதா பேசினார்.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 9 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் தேவராஜ், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், தொடக்க கல்வி அலுவலர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். விஷன்-2023 செயல்படுத்தப்படும், அமைச்சர் சிவபதி தகவல். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி பேசியதாவது:
எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 14,582 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘விஷன் 2023’ திட்டத்தில் அனைத்து துறைகளையும் சிறப்பாக முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. பென்சில், ஜியோமெட்ரிக் பாக்ஸ், மேப் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் தரத்தை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்த பின்னரே மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...