சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதையும் எதிர்பாராமல், பள்ளியின் வளர்ச்சிக்கும், கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடும் ஆசிரியரை கவுரவிக்கும் வகையில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
சிறந்த ஆசிரியர், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகள், 100 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறதா என்று விசாரித்தால், கல்வித் துறையின் பதில், மவுனமாகத் தான் இருக்கிறது.
வரும் 5ம் தேதி, தமிழக அரசு சார்பில், சென்னையில் நடக்கும் விழாவில், 360 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள், சென்னையில் ஆய்வு செய்யப்பட்டன.
ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், அவர்களுடைய அருமை, பெருமைகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என, பலவற்றையும் சேர்த்து, பெரிய புத்தகம் அளவிற்கு, ஒவ்வொருவரும் கோப்புகள் தயார் செய்து அனுப்பினர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முதல், மாவட்டம், தொகுதி என, பலரும், "இவர், எனக்கு மிகவும் தெரிந்தவர்; திறமையானவர். பள்ளி வளர்ச்சிக்காக, அரும்பாடு பட்டுள்ளார். உள்ளூரில், ஏற்கனவே பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்&' என, அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிந்துரை கடிதங்களை, விருதுக்குரிய விண்ணப்பத்துடன் இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனாலும், ஆளுங்கட்சியினரின் பரிந்துரை கடிதங்களை எடுக்காமல், அப்படியே மாவட்ட அதிகாரிகள், மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி விட்டனர்.
விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. கல்வி நடைமுறையை ஒழுங்குபடுத்தி, சிறப்பாக இயங்கும் கல்வி நிலையங்கள் உருவாகி வரும் சூழ்நிலையில், இதற்கான அடிப்படை வரன்முறைகளும் வரும் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கருதுகிறது.
அதன் மூலம் இத்துறையில் மேலோங்கி இருக்கும் ஆசிரியர் மட்டுமே இந்த விருதைப் பெற வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது; இருந்தாலும், இது, நடைமுறைக்கு வராது என்பதே, சிறந்த ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
Courtesy : Dinamalar
Courtesy : Dinamalar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...