தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான வசதிகள் என, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
தற்போது, தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிய, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், ஒன்றியத்திற்கு, ஐந்து தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூன்று; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி அல்லது ஆதிதிராவிட நலத்துறை பள்ளி தலா, ஒன்று என பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், இரண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவற்றை சோதித்து, அவற்றுக்கு மதிப்பெண் போடுகின்றனர்.
மொழிப் பாடங்களில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; வாசிப்புத் திறனுக்கு, 40 மதிப்பெண்; கணிதப் பாடத்தில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; மனக்கணக்கிற்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிவதற்காக, தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், ஆறாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படும்.
ஆய்வின் போது கிடைக்கும் விவரங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பப்படும். ஆய்வு அடிப்படையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...