சமச்சீர் கல்விக்குப் பிறகு ஏராளமான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சி.பி.எஸ்.இ.யுடன் இணைப்புப் பெற 60 பள்ளிகள் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
சென்னை மண்டலத்தில் உள்ள 2,650 பள்ளிகளில் தமிழகத்தில் மட்டும் 327 பள்ளிகள் உள்ளன.
ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன், ஓரியண்டல் ஆகிய பாடத்திட்டங்களுக்குப் பதிலாக அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியின் கீழ் பொதுப்பாடத்திட்டம் கடந்த ஆண்டு (2011-12) அறிமுகப்படுத்தப்பட்டது.
சமச்சீர் பாடத்திட்டத்தால் தங்களது கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக தனியார் பள்ளிகள் வழக்குகளைத் தொடர்ந்தன. ஆனால், அப்போதிருந்த பாடத்திட்டங்களைவிட, பொதுப்பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகக் கூறி அதையே பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் பாடத்திட்டம் போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பிரிவுக்கு மாறுவதில் ஆர்வமாக உள்ளன.
சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக தமிழகத்தில் 276 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 51 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற்றுள்ளன.
வழக்கமாக ஆண்டுக்கு 10 பள்ளிகள் வரை புதிதாக சி.பி.எஸ்.இ. இணைப்பு வழங்கப்படும். ஆனால், ஒரே ஆண்டில் 51 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற்றுள்ளது மிகப்பெரிய எண்ணிக்கைதான். தமிழக பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. ஆர்வம் அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இப்போது 327 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. அடுத்த ஜனவரிக்குள் இந்த எண்ணிக்கை 400-ஐ நெருங்கும் வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான பள்ளிகள் சி.பி.எஸ்.இ.க்கு மாறுவது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள 60 பள்ளிகள் தில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்தில் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ளன. தடையில்லாச் சான்றிதழ்கள் பெறாமலும் ஏராளமான பள்ளிகள் சி.பி.எஸ்.இ. இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 மாதங்களில் இணைப்பு கிடைக்கும்: சி.பி.எஸ்.இ. இணைப்புப் பெற விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு ஆவணங்களைப் பரிசீலித்தவுடன் நேரடியாக ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு 2 மாதங்களில் சி.பி.எஸ்.இ. இணைப்பு கிடைக்கும் என்று சி.பி.எஸ்.இ. அமைப்பின் சென்னை மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன் ராவ் கூறினார்.
மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ், நில ஆவணங்கள், கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகள், உறுதித் தன்மை மற்றும் தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களோடு தில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்தில் நேரடியாகவோ, ஆன்-லைன் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த ஓரிரு மாதங்களில் இந்தப் பள்ளிகளுக்கு ஆய்வுக் குழுவை சி.பி.எஸ்.இ. அமைப்பு அனுப்பும். அவர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு வசதிகள், கல்வித் தரம், பள்ளி மேலாண்மைக் குழு, ஆசிரியர்களின் பணிபுரியும் சூழல், நிதி நிலைமை ஆகியவற்றை ஆராய்ந்து இந்தப் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. இணைப்பு வழங்குவது தொடர்பாக முடிவு செய்வார்கள் என்று சுதர்சன் ராவ் தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான இணைப்பு படிப்படியாக வழங்கப்படுகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இணைப்புப் பெற ஓராண்டுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல், 9, 10 வகுப்புகளுக்கும் இணைப்புப் பெற பள்ளி மாணவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே விண்ணப்பிக்க வேண்டும். மொத்தமாக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை இணைப்பு வழங்கும் நடைமுறையும் அமலில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...