மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் ஏற்பட்ட கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 1,500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
கடந்த ஜூனில், தமிழகத்தில் 100 அரசு உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும், 9 பணியிடங்கள் வீதம், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன.
கடந்த ஜூலையில் நடந்த பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம், இந்த 900 கூடுதல் பணியிடங்கள் உட்பட 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் நியமனம் பெற்ற இவர்களுக்கு, நிதித்துறை ஒப்புதல் அளித்து,
எக்ஸ்பிரஸ் பே ஆர்டர் (ஊதிய வழங்குவதற்கான உடனடி உத்தரவு) வழங்க வேண்டும். ஆனால் 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், இவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட்டிற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: ஒரு பள்ளியில் இருந்து பணியிடம் மாற்றி, வேறு பள்ளிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய வழங்குவதற்கான உடனடி உத்தரவு வழங்க வேண்டும். இதற்கு மாநில நிதித்துறையில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நிதி துறை ஒப்புதல், இந்த ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் 2 மாதம் 1590 ஆசிரியர்கள் சம்பளம் பெறமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...