பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டு தேர்வுகளை பொதுத்தேர்வு போன்று நடத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன.
பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று குமரி மாவட்டத்தில் மொத்தம் 266 பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகள் 10, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு போல் நடக்க உள்ளது. இது தொடர்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் மனோகரன், செல்வராஜ், ரத்தினம் மற்றும் 250 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், படைப்பாற்றல் கல்வி, சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வினை பயமின்றியும், மன உளைச்சலின்றி எதிர்கொள்ளவும், நடப்பு கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொது தேர்வு போல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்திற்கு முன்னதாக எக்காரணம் கொண்டும் வினாத்தாள் பார்சலை பிரிக்கக்கூடாது. விநியோக மையங்களில் இருந்து பஸ் அல்லது இரு சக்கர வாகனங்களில் வினாத்தாளை எடுத்து செல்லக் கூடாது. அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான வினாத்தாள் என்பதால் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...