கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் இம்மாதம் 9ம் தேதி கொண்டாடும் நிலையில், கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி விடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.
இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, ""ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார். இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...