இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநிலங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத் தேர்வும் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின்வாங்க வைத்துவிடுகிறது.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45 முதல் 75 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் சீனாவிலோ, ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 15 முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது. இதனால், பலரும் சீனாவை நோக்கி பறப்பதற்கு தயங்குவதில்லை.
கட்டணம் மட்டும் குறைவாக இருப்பதில்லை. மருத்துவக் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு, கல்வித்தரம், தொழில்நுட்பம், ஆசிரியர் தகுதி மற்றும் படிக்கும் சூழல் ஆகியவை சிறப்பாக இருப்பதாக அங்கு படித்துவந்த மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சீன அரசாங்கமும், வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் நாட்டில் வந்து மருத்துவம் படிப்பதை ஊக்குவிக்கிறது. கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முறையே 60 மற்றும் 80 இந்திய மாணவர்கள் சீன மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். அந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 100 என்ற அளவில் உயர்ந்தது. சீனாவில், இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போல, நன்கொடை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
முன்பு, வெளிநாட்டு மருத்துவப் படிப்பிற்கு, இந்திய மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற இடங்களாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்கள் இருந்தன. ஆனால், அங்கே செலவு மிகவும் அதிகம் என்பதால், மாணவர்கள் வேறு இடங்களை நாடத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவில், 5 வருட மருத்துவப் படிப்பிற்கு 1 கோடி வரை செலவாகிறது என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில், தென்னிந்திய மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். சீன மருத்துவக் கல்லூரிகள் தங்கள் நாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக தனித்தனி Batch -களை வைத்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்கான பிரிவில் பயிற்றுமொழி ஆங்கிலம்.
சீனாவில் MBBS படித்து நாடு திரும்பும் இந்திய மாணவர்கள், இங்கே மருத்துவ முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். நோயாளிகளுடன் பேச, வெளிநாட்டு மாணவர்கள், சீன மொழியை பழகுவது அவசியம் என்ற நிலை இருந்தாலும், அந்நாட்டில், சுமார் 50 பல்கலைகள், ஆங்கிலத்தில், மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கடுத்து, மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் நான்காவது இலக்காக சீனா திகழ்கிறது. விலை குறைந்த மருத்துவப் படிப்புக்கு, ஜார்ஜியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பெயர் பெற்றிருந்தாலும், இந்திய மாணவர்களை ஈர்ப்பதில், சீனாவே முன்னணியில் உள்ளது. முன்னொரு காலத்தில், குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பிற்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ரஷ்யா முன்னணியில் இருந்ததை பலரும் அறிவார்கள். ஆனால், இனவெறி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்த இடத்தை ரஷ்யா இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
சீனாவில், MBBS படித்து வெளிவரும் மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய மெடிக்கல் கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வில் தேற வேண்டும்.
இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பல கல்லூரிகளின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தரத்தைப் பற்றி அந்தக் கல்லூரிகள் கவலைப்படுவதே இல்லை. எனவே, இந்திய மாணவர்களுக்கு, சீனா ஒரு நல்ல மாற்றாக இருக்கிறது.
சமீபத்தில்கூட, உத்திரபிரதேச அரசாங்கம், மாநிலத்தின் தொலைதூர கிராமப்புற பகுதிகளில் பணியாற்ற, சீனாவில் படித்த மருத்துவர்களை பணியமர்த்தும் செயல்பாட்டை துவங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...