ப: அமெரிக்கக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தியாவில் படிக்க வரும் அமெரிக்க மாணவர்களின் சதவிகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்தி வாய்ப்புகளை மேம்படுத்த இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகின்றன.
அமெரிக்க, இந்தியக் கல்வி முறைகளுக்கிடையிலான பெரிய வேறுபாடுகளில் ஒன்று, கல்லூரிப் படிப்புக் காலம்தான். அமெரிக்காவில், பெரும்பாலான பட்டப்படிப்புகளின் காலம் நான்காண்டுகள். சில பாடப்பிரிவுகளில் இது ஐந்தாண்டுகளும் அதற்கும் மேலும்கூட ஆகலாம். மேலும் அமெரிக்காவில், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் மற்றும் மருந்தாக்கவியல் உள்ளிட்ட தொழில்சார் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு, ஆயத்தப் படிப்புகளை முடித்தாக வேண்டும்.
அமெரிக்கக் கல்வி முறையில், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு போன்ற மத்திய நிர்வாக அமைப்பு ஏதும் கிடையாது. கல்வியாண்டு என்பது, பொதுவாக ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும். கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, இரண்டு, மூன்று அல்லது நான்கு பருவங்களாகப் பிரிக்கப்படும். இலையுதிர் பருவம் (ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும்), இளவேனிற் பருவம் (ஜனவரியில் தொடங்கும்) ஆகிய இரண்டில் எதில் வேண்டுமானாலும் மாணவர்கள் புதிய படிப்புகளில் சேரலாம்.
அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி விரிவாக அறிய, அமெரிக்க-இந்தியக் கல்வி அறக்கட்டளையின் (USIEF) இணையத்தை www.usief.org.in பார்க்கவும். உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய இன்னொரு தளம்: www.educationusa.state.gov
கே: தினமும் ஜெமினி மேம்பாலம் வழியாக பஸ்ஸில் நான் செல்வதுண்டு. அப்போது அமெரிக்கத் தூதரகம் பக்கம் பார்க்க நேரிட்டால், நான் வாழ்வது இந்தியாவிலா அல்லது அமெரிக்காவுக்கு அடிமையான ஒரு நாட்டிலா என்ற சந்தேகம் எனக்கு வரும். அமெரிக்கத் தூதரகம் இந்தியாவில், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இதற்குப் பாதுகாப்பு அளிப்பது இந்தியா. ஆனாலும் அமெரிக்க விசா வாங்குவதற்கு இந்தியர்கள் சாலையோர நடைபாதையில் காத்து நிற்க வேண்டுமா? விசா விண்ணப்பதாரர்களின் முதற்கட்ட சோதனைக்கு தூதரக வளாகத்துக்குள்ளேயே இடம் ஒதுக்க முடியாதா? குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் வெயிலில் காத்திருக்க நேரிடுகிறது. இப்போது பாதுகாப்புக்காக விண்ணப்பதாரர்களை சோதனையிடுவதும் வெளியிலேயே நடக்கிறது.பொதுமக்களின் வசதிக்காகப் போடப்பட்டுள்ள நடைபாதையை விசா வாங்க வருபவர்களைச் சோதனையிடும் இடமாகப் பயன்படுத்துவது சரியா? தூதரக வளாகத்துக்குள் போதிய இடமிருந்தும் ஏன் இப்படி? -சி.எஸ். சேகர், சென்னை
ப: பொதுவாகப் பாதுகாப்பு விதிகளின்படி, எல்லாத் தூதரகங்களின் வளாகத்துக்குள்ளும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நுழைய முடியும். எனினும், விசா நடைமுறை இப்போது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக, விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூதரகத்துக்குள் இருக்க வேண்டியிருக்கும்.
விசா விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக நேர்காணல் நேரத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும். அந்த நேரத்துக்கு 15 நிமிடங்கள் முன்பாக வந்தால் போதும். அதிக நேரம் வெளியில், வரிசையில் நிற்க வேண்டியிராது.
இருப்பினும், கடுமையான வெயில் அல்லது மழைக் காலங்களில் தானியியங்கிப் பந்தல் விண்ணப்பதாரர்களுக்குப் பாதுகாப்பளிக்கும். உள்ளே நுழைந்தவுடன், அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் தேவையை ஒட்டிய உரிய சேவையை துரிதமாக அளிக்கும் நேர்காணல் ஜன்னலுக்கு அனுப்பப்படுவார்கள்.
விசா நடைமுறை சார்ந்த இத்தகைய மாற்றங்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தூதரகத்துக்குள் இருக்க வேண்டிய நேரம் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு நாளைக்கு 1000-த்திற்கும் மேற்பட்ட விசா விண்ணப்பதாரர்கள் வருகிறார்கள். மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி, குறிப்பிட்ட வகை விசாக்களை புதுப்பிக்க விண்ணப்பதாரர்கள் தூதரகத்திற்கு வர அவசியமில்லை. கூடுதல் விவரங்கள் அறிய: http://chennai.usconsulate.gov/visas.html.
கே: அமெரிக்கா மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு நாடாக இருந்தும், வளரும் நாடுகளை ஆதிரிப்பதாகத் தெரியவில்லையே...? -செந்தில், கோவை
ப: பிற நாடுகளின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்க அரசு அளிக்கும் நிதியுதவி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அங்கமாகும். 2011-ம் ஆண்டில் அமெரிக்க அரசு உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கும் 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி அளித்திருக்கிறது. "வறுமை, நோய், பசி, சாதகமற்ற பருவநிலை மாற்றம் ஆகியவை சமூகங்களை நிலைகுலையச் செய்து வருங்கால மோதல்களுக்கும் வழிவகுத்துவிடும்'' என்று இத்தகைய உதவிகளுக்கான காரணத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக்காட்டுகிறார்.
"தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையுடன் மக்களை உருவாக்குவதே'' அமெரிக்க அன்னிய நிதியுதவியின் நீண்டகாலக் குறிக்கோளாகும். இந்த அடிப்படையில் அமெரிக்க அரசு அளிக்கும் நிதியுதவி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
வறுமை ஒழிப்பு, ஜனநாயக மீட்பு, மனித உரிமை காத்தல், நோய்களை ஒழிக்கும் சுகாதாரத் திட்டங்கள், ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, மனிதநேய உதவி உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும். அமெரிக்க அரசு பிற நாடுகளுக்கு அளிக்கும் நிதியுதவி பற்றி மேலும் அறிய, காண்க: http://www.foreignassistance.gov
அமெரிக்க அரசின் நிதயுதவி மட்டுமின்றி, தனியார், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் மதம் சார் அமைப்புகளிடமிருந்தும் அமெரிக்கா வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது.
சமீபத்திய பொருளாதாரத் தேக்க நிலையையும் மீறி, இந்த வகையில் அமெரிக்காவிலிருந்து 2010-ல் வளரும் நாடுகளுக்கு சென்ற நிதியுதவியின் அளவு 39 பில்லியன் டாலர். இது 2009-ம் ஆண்டின் 37.5 பில்லியன் டாலரைவிட அதிகம் என ஹட்ஸன் நிறுவனத்தின் 2012-ம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கே: அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்.எஸ் படிக்க நான் திட்டமிட்டிருக்கிறேன். அங்கு தங்கிப் படிப்பதற்கு எவ்வளவு செலவாகும்? அத்துடன் குறைந்த கட்டணங்கள் உள்ள கல்லூரிகள் பற்றிய விவரங்களும் தேவை. -ஆர். தமிழரசன், மதுரை
ப: அமெரிக்காவில் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதென்பது பல கட்ட முயற்சிகளைக் கொண்டது. அதை நிர்ணயிக்கக்கூடிய பல்வேறு அம்சங்களில் பொருளாதாரப் பலம் முக்கியமானது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வந்து படிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பொருளாதாரத்திக்கேற்ப உரிய கட்டணங்களைக் கொண்ட கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு உதவும் வகையில் அமெரிக்கக் கல்வித் துறை விரிவான தகவல் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அவ்விவரங்களை http://collegecost.ed.gov/cat c/Default.aspx என்ற இணையத் தொடர்பில் காணலாம்.
அமெரிக்காவில் கல்வி பயில்வது தொடர்பான துல்லியமான, சரியான மற்றும் விரிவான விவரங்களை அறிய, அமெரிக்க-இந்தியக் கல்வி அறக்கட்டளையை (USIEF) 044-2587 4423/ 4131 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது usiefchennai @usief.org.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் சந்தேகங்களை அனுப்பலாம்.
கே: எனது மகன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதால் (டிசம்பர் 2012 வரை) நானும் எனது மனைவியும் சுற்றுலா விசாவில் அங்கு போக விரும்புகிறோம். இருவரிடமும் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்கிறது.
பாஸ்போர்டில் எனது பெயர் S.Ramamoorthi என்றிருக்கிறது. எனது பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டது அது. ஆனால் எனது மகனின் பாஸ்போர்ட்டில் எனது பெயர், எனது அலுவலக ஆவணத்தின்படி, Srinivasan Ramamoorthy என்றிருக்கிறது. கடைசி எழுத்து 'i' க்குப் பதிலாக 'y' என்று மாறிவிட்டது. இது எனக்கும் என் மனைவிக்கும் விசா கிடைப்பதைப் பாதிக்குமா? - எஸ். ராம்மூர்த்தி, கோவை
ப: உங்களுக்குச் சுற்றுலா விசா கிடைப்பதற்கான தகுதி, எந்த வகையிலும் உங்கள் மகனின் வேலை விசா அல்லது அவரது பெயரின் எழுத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, பெயரில் உள்ள எழுத்து வித்தியாசம் பற்றி தூதரக அதிகாரி உங்களிடம் கேட்கும்பட்சத்தில், அது தொடர்பான விளக்கத்தை அளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சட்டப்பூர்வமான பயணத்துக்கு உதவுவதில் அமெரிக்கா எப்போதும் உறுதியாக இருக்கிறது. மேலும் விளக்கம் தேவைப்பட்டால், காண்க:http://www.vfsusa.co.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...