டி.ஆர்.பி., நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது. தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, டெண்டர் விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும். அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும். ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தனி இடத்தில் அமைகிறது: டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது. இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவை தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...