தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பல லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இட மாறுதல் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தி வருகிறது.
இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில் கவுன்சிலிங் நடப்பதில்லை. இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் இல்லாத நிலையில் பல மாவட்டங்களில் இருந்து, மாவட்ட மாறுதலுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.
சில கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பெயரால் கவுன்சிலிங்களில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். காலிப்பணியிடங்களை மறைத்து தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் வருமானம் இருப்பதால், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் தொடர்ந்து வருகிறது.
இதனை தவிர்க்க ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நடக்கும் கவுன்சிலிங் போல் ஆன் லைன் வசதி செய்ய வேண்டும். இடமாறுதல் உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலமாக உடனடியாக வழங்க வேண்டும்.
இது போன்ற நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடைப்பிடித்தால் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும். இதனை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...