முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர். இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசு விருது
மிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது.
மாநில அரசு விருது
மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர்
சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,&'&' என்றார்.
தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...