சென்னை: பள்ளிக்கு மட்டம் போடும் மாணவ, மாணவியரை அவர்களது வீடுகளுக்கே சென்று, அழைத்து வந்து, கற்பிக்கும் புதிய யுக்தியை மாநகராட்சி பள்ளி ஆசிரியைகள் கடைபிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை திடீர்நகர் பகுதியில் உள்ளது, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. அப்பகுதியை சுற்றி வசித்து வருபவர்களின் குழந்தைகளே, இங்கு அதிகளவில் படிக்கின்றனர்.
குறிப்பாக, கோதாமேடு, திடீர் நகர், சலவையாளர் காலனி, ஆத்துச்சேரி, அண்ணா நகர், சாமியார் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், கூவம் கரையோரம் வாழ்வோரின் குழந்தைகள், இந்த பள்ளியில் படிக்கின்றனர். தினமும் வேலைக்குச் சென்றால் தான், குடும்பத்தை நகர்த்த முடியும் என்ற கட்டாயத்தில், இப்பகுதிவாசிகள் உள்ளனர்.
எனவே, பெரும்பாலானோர் காலை, எட்டு மணிக்குள்ளாகவே வேலைக்கு புறப்பட்டுச் சென்று விடுகின்றனர். இதனால், தங்களது பிள்ளைகள் தினமும் பள்ளிக்கு செல்வதை கண்காணிக்க முடியாத நிலை இருந்தது.
இந்த பிரச்னையை மிகவும் சாதுரியமாக அந்த பள்ளி ஆசிரியைகள் கையாளுகின்றனர். குறிப்பாக, காலையில் வகுப்புக்கு வராத மாணவ, மாணவியரின் பட்டியலை ஆசிரியர்கள் தயாரிக்கின்றனர். அதை, கையில் எடுத்துக் கொண்டு, சினிமாவில் வரும் காட்சி போல குடியிருப்பு பகுதியில், வீடு வீடாக ஆசிரியர்கள் செல்கின்றனர்.
மனம்போன போக்கில் திரியும் சிறுவர், சிறுமியரை தயார்படுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். ஒளிந்துக் கொண்டிருக்கும் சிறுவர்களையும் விடுவதில்லை. அவர்களைத் தேடி அடையாளம் கண்டு, பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் தற்போது, அந்த பகுதியில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. தப்பிக்க முடியாத நிலையில், காலையில் மாணவ, மாணவியர் பள்ளிக்கு புறப்பட்டு விடுகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "கூலி வேலைக்கு, காலையிலே சென்று விடுகிறோம். ஆசிரியைகள் தங்களது பிள்ளைகள் போன்று, வீட்டிற்கே நேரடியாக வந்து, பள்ளிக்கு அழைத்து செல்வது நல்லது தான். நாங்கள் தான் கூலி வேலை பார்க்கிறோம். எங்களது பிள்ளைகளாவது சிறந்து படிக்க வேண்டும். அதற்காக ஆசிரியைகள் எடுக்கும், அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்றனர்.
இதுகுறித்து, பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் காலையில் இறை வணக்கம் முடிந்தவுடன், சீருடை அணிவது, நாள்தோறும் குளிப்பது, காலணி அணிவது போன்றவற்றின் முக்கியத்துவத்தையும், அதற்கான காரணத்தையும் மாணவ, மாணவி யரிடையே விளக்கிச் சொல்கிறோம். பள்ளிக்கு வராத குழந்தைகளை அடையாளம் கண்டு, பள்ளிக்கு அழைத்து வந்து, பாடம் கற்றுக் கொடுக்கிறோம்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...