வரும் டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாரானவர்கள் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பரில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் விண்ணப்பம் வழங்கல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஆன்-லைன் மூலமே நடைபெறும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பட்டதாரிகளுக்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தேர்வர் இந்தத் தேர்வில் ஒருமுறை வெற்றிபெற்றால், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 23.08.10-ம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள நடைமுறையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம். தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு மட்டும் அரசாணை பெறப்பட்டுள்ளது.
ஆனால், தேசிய அளவில் இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோர், ஆசிரியர் பட்டதாரிகள் ஆகியோருக்கும் இந்தத் தேர்வு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது முதல் முறை என்பதால், விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால், அதை சரிசெய்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அடுத்தமுறை ஆன்-லைன் மூலம் விண்ணப்ப விநியோகம், சமர்ப்பிப்புப் பணிகள் நடைபெறும்.
அப்போது, விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதுவே தகுதிக் குறைவாகக் கருதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...