டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.
டி.இ.டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.இ., தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி., நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
"திறமையானவர் கிடைப்பார்'': இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன. டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.
"கீ-ஆன்சர்'' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்'' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்'' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படி தெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்'' ஆனதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல் தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்'' ஆகி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...