ஆசிரியர் பணி நியமனம் முழுவதும் வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடைபெறுகிறது. முறைகேடான வழிகளில் பணி நியமனம் பெற்றுத்தருவதாகக் கூறும் மோசடி பேர்வழிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியது:
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சட்ட விரோதமான மற்றும் தவறான வழிகளில் வேலை வாங்கித் தருவதாக சிலர் கூறி வருவதாகவும், சில விண்ணப்பதாரர்களும் அவர்களிடம் ஏமாறுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தம் 42 ஆயிரம் ஆசிரியர்களை நியாயமான, நேர்மையான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியும் கூறியுள்ளார்.
ஒரே ஆண்டில் இந்த அளவிலான ஆசிரியர்களை நியமிப்பது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. ஆசிரியர் நியமனப் பணிகள் முழுவதுமாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் அந்தத் தகவல்கள் அனைத்தும் உடனடியாக ஸ்கேன் செய்யப்படுகின்றன. இந்தத் தகவல்களை யாரும் திருத்த முடியாது. அதேபோல் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு, பதிவு எண், இருக்கை ஒதுக்கீடு அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு தபாலில் அனுப்புவதோடு, இணையதளத்திலும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதன்மூலம் எங்கிருந்தாலும் அவர்கள் அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வருக்கும் அவர் தேர்வு எழுதி முடித்தவுடன் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது. இந்த விடைத்தாள்களும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
அதன்பிறகு, இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதனடிப்படையில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுகின்றனர். தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விடைகளும் வெளியிடப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு
அடிப்படையிலான நியமனங்களுக்கு, அந்த அலுவலகம் வழங்கும் பதிவு மூப்புப் பட்டியல் www.cet@vsnl.net என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இந்தப் பட்டியலைச் சரிபார்த்து ஏதேனும் குறை இருந்தால் வேலைவாய்ப்பகத்தை அணுகலாம். ஆசிரியர் நியமனம் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்துவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு கவனத்துடன் செயல்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் அனைவரும் முழு நம்பிக்கையுடன் தேர்வுக்கு தங்களை சிறப்பாக தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சமூக விரோதிகள், மோசடி பேர்வழிகளின் வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். சட்ட விரோதமானச் செயல்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கிரிமினல் குற்றமாகும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரிலோ அல்லது 044-64525208, 64525209 என்ற தொலைபேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.
இணையதளத்தில் விடைகள் வெளியீடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுகளுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அனைத்துப் பாடங்களுக்கான விடைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக விடைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகிய போட்டித் தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (ஜூன் 25) வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் மே மாதமும் நடைபெற்றன.
Revision Exam 2025
Latest Updates
Home »
» TET தேர்வு : மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...