பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப் பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு நேட்டா நுழைவுத் தேர்வில் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் (குறைந்தது 80 மதிப்பெண்கள் தேவை) என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தனியே தயாரிக்கப்பட்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ் அந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தனியே கவுன்சலிங் நடத்தப்படும்.
ஒரே மாதிரியான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இருக்கும் சூழ்நிலையில் யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண். ஒரே விதமான கட் ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற சூழ்நிலையில் அந்த இரண்டு பேருக்கும் ரேங்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது முதலில் பார்க்கப்படும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்றால், அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால், அதையடுத்து நான்காவது விருப்பப் பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களது பிறந்த தேதியைப் பார்ப்பார்கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் பத்து இலக்க எண்ணாகும். குலுக்கல் முறையைப் போன்று கம்ப்யூட்டர் மூலம் இந்த எண் உருவாக்கப்படுகிறது. இதில் கூடுதலான எண் வருபவர், ரேங்க் அடிப்படையில் முன்னுரிமை பெற்றவராகக் கருதப்படுவார். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான், கவுன்சலிங்கிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...