தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...
முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...
கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.
தொலைபேசி எண்: 044-28594780
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.
இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012
விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm
இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012
விவரங்களுக்கு: www.momascholarship.gov.in
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும். போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012
உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012
மேலும் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: www.nhfdc.nci.in
அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.
மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.
விவரங்களுக்கு: www.inspire-dst.gov.in
புத்தக வங்கிகள்
கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978
ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110
ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...