திருநெல்வேலி: தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம் "தள்ளாடி" வருகிறது.
இதனை கண்காணிக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அகில இந்திய அளவில் அனைவருக்கும் இலவச கல்வி என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே குரல்கள் ஓங்கி ஒலித்தன. கல்வி பெறுவது மக்களின் உரிமை, கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற சமூக நீதியின் அடிப்படையில் இக்கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், சுப்ரீம் கோர்ட் தலையீடு போன்றவற்றினால் இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்கு பிறகு அனைவருக்கும் இலவச கல்வி என்பது, கட்டாய கல்வி என சட்டமாகியுள்ளது. இதன்படி கடந்த 2010ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது.
கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்று இச்சட்டம் கூறுகிறது. ஆனால் முழுமை பெறாத இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆட்சியாளர்களின் உறுதியற்ற நிலை, அதிகாரிகளின் மெத்தன போக்கு, கல்வியை லாப வேட்டடைக்காக மாற்ற துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் என இந்த தடை பட்டியல்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
அரசின் நிதி உதவி பெறாத சிறுபான்மை நிறுவனங்கள் நீங்கலாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்கள் பள்ளியில் மொத்த இடத்தில் 25 சதவீதம் அருகில் உள்ள ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளை சேர்க்க வேண்டும். இக்குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க உயர் மட்ட குழுவை அரசு நியமிக்க வேண்டும் என இச்சட்ட விதிகள் கூறுகின்றன.
ஆனால் தமிழக அரசு இக்குழுவை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதாக பல்வேறு அமைப்புகள் குறை கூறுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் இதனை கண்டு கொள்ளாதது ஒருபுறமிருக்க, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு கட்டணம் வசூலித்து அரசுக்கு சவால் விடுத்து வருகின்றனர். அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் கட்டாய நன்கொடை என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் விரும்புகின்றனர்.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு பள்ளிகள் 142, உதவி பெறும் பள்ளிகள் 86, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 62, மெட்ரிக் பள்ளிகள் 106 உட்பட மொத்தம் 433 பள்ளிகள் உள்ளன. உயர்நிலைப் பள்ளிகள் 186, மேல்நிலைப் பள்ளிகள் 247ம் இதில் அடங்கும். மாவட்டத்தில் அரசிடம் நிதி உதவி பெறாத சிறுபான்மை நிறுவனங்கள் நீங்கலாக பிற பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.
இதனை கண்காணிக்க உயர் மட்ட குழுவும் அமைக்கப்படாததால் பள்ளி நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் உள்ளன. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி கூறும் போது, "ஒரு கி.மீ சுற்றளவுக்குள் எந்தவித பள்ளியும் இல்லாத நிலையில் அந்த தனியார் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்னை இதுவரை எழவில்லை. எனினும், இதுதொடர்பாக உரிய ஆய்வுகள் செய்யப்படும்&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...