Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC குரூப்-4 நன்றாகத் தேர்வு எழுதுங்கள்! வேலை நிச்சயம்!



பொன். தனசேகரன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை நன்கு எழுதுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வெளிப்படையான நிர்வாகத் தன்மையை தேர்வாணையம் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார் தேர்வாணையத்தின் தலைவர் ஆர். நட்ராஜ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு எழுத ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசுத் துறைக்கு தகுதி படைத்தவர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ள தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படை நிர்வாகத் தன்மையையும் புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார் தேர்வாணையத்தின் தலைவர் ஆர். நட்ராஜ். அவர், ‘புதிய தலைமுறை கல்வி’க்கு அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இதோ...

“தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக அரசில் 160க்கு மேற்பட்ட துறைகள் இருக்கின்றன. அரசுத் துறைகளில் உள்ள காலி இட நிலவரங்கள் குறித்து, அந்தந்தத் துறைகளிலிருந்து தகவல்களைக் கேட்டறிந்து, எத்தனை காலி இடங்கள் இருக்கின்றன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகுதான், அந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். இதன் மூலம், அரசுத் துறையில் ஏற்படும் காலி இடங்களை குறுகிய காலத்தில் நிரப்ப வாய்ப்பு ஏற்படும்.

போட்டித் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதிதான் ஆன்லைன் விண்ணப்ப முறை. அத்துடன், போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையையும் தயாரித்து முன்னதாக வெளியிட்டிருக்கிறோம். அதன்படி, உரிய காலத்தில் தேர்வுகளை நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறோம்.

குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்காக விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை டிஎன்பிஎஸ்சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை மூலம் தேர்வுப் பணிகளை துரிதமாக முடிக்க முடியும் என நம்புகிறோம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்கான செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம் விண்ணப்பிக்கும் குடும்பத்தில் உள்ள பலர் ஆன்லைன் விண்ணப்ப முறையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். ஆன்லைன் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுவதால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி இல்லாதவர்களுக்கும் இன்டர்நெட் சேவை பற்றி பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கிக் கிளைகளிலும் தபால் அலுவலகங்களிலும் இந்த சேவை மையங்கள் இயங்கும். இங்கு எந்தவித சேவைக் கட்டணமும் செலுத்தாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதேபோல, தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்களையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள இடங்களிலிருந்து தேர்வு எழுத முடியும். இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நிரந்தரப் பதிவு அவசியம் இல்லை. நிரந்தரப் பதிவு இல்லாமலேயே நேரடியாக விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவுக்கு மாற்றப்படும். எனவே, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனியாக நிரந்தரப் பதிவு செய்ய வேண்டியதில்லை. குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ததும் வழங்கப்படும் பதிவு எண் மற்றும் பாஸ் வேர்டையே நிரந்தப் பதிவுக்கான நிரந்தர அடையாள எண்ணாகவும் பாஸ் வேர்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதிவு ஐந்து ஆண்டு காலத்துக்கு செல்லுபடியாகும்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதுபவர்கள் ஆன்லைன் மூலம் மாதிரித் தேர்வு எழுதிப் பயிற்சி பெறும் வகையில் வசதிகளும் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இத்தேர்வில் பொது அறிவு (அடிப்படை கணிதத்துடன்), தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவை இருக்கும்.  கடினமாகவும் மிதமாகவும் கலந்த கலவையாக அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். கேள்விகளுக்கு கோடிங் ஷீட்டில் பதில் அளிக்க வேண்டும். தேர்வு நடக்கும் இடத்தில் வினாத்தாள்கள் பிரிக்கப்படும்போதிலிருந்து தேர்வு அறைக்கு வினாத்தாள் எடுத்துச் செல்லப்படுவது வரை வீடியோ எடுக்கப்படும். அதேபோல தேர்வுக் கூடத்தில் வீடியோ மூலம் தேர்வு கண்காணிக்கப்படும். இதுபோன்ற பல்வேறு கண்காணிப்பு முறைகளின் மூலம், தேர்வுக்கூட முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறோம்.

தேர்வு முடிந்த பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளை இணைய தளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு வினாக்கள் குறித்து சந்தேகம் எழுப்புபவர்களின் கருத்துகளை நிபுணர் குழு ஆராய்ந்த பிறகு, சரியான விடை வெளியிடப்படும். ஒவ்வொரு மாணவரும் தங்களது விடைத்தாளை இணைய தளத்தில் பார்க்கலாம். அதன் அருகே சரியான விடை எது என்பதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையை வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இது.

தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவது நல்லது. இதனால், கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க முடியும். இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதற்கேற்ற வகையில் நன்கு பாடங்களைப் படித்துப் பயிற்சி பெற வேண்டும். தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதை கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது, உரிய காலத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்க பயிற்சியாக இருக்கும். தேர்வில் வினாத்தாள் வழங்கப்பட்டவுடன், தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுத வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு விடை தேடி, நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதனால், தெரிந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நேரமில்லாமல் போகலாம். எனவே, தெரிந்த கேள்விகளுக்கு விடையளித்து முடித்து விட்டு, பிறகு தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கலாம்.

இந்தப் போட்டித் தேர்வு எழுபவர்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். எப்படி நன்றாகத் தேர்வு எழுதினாலும் வேலை கிடைக்காதோ என்ற அவநம்பிக்கை தேவையில்லை. நியாயமான முறையில் தேர்வுகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. நன்றாகத் தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம். வேலையும் நிச்சயம் கிடைக்கும். இந்த நம்பிக்கையோடு தேர்வுகளை எழுதலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நட்ராஜ்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive