செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் கட்டாய கல்வி சட்டத்தில் கொண்டு வரும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
குழந்தைகளுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி கற்றுத்தரும் வகையில், கல்வி அடிப்படை உரிமை சட்ட மசோதா, ராஜ்யசபாவில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, காங்கிரஸ் எம்.பி., பிரியா தத் போன்றோர், "குறிப்பிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை,பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. குறிப்பாக, செயல் திறன் குறைந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி, வீடுகளிலேயே, கல்வி கற்றுத் தருகின்றனர்.
இதனால், அந்த குழந்தைகள் தனிமை சூழலில் வசிக்கின்றனர். அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தில், செயல் திறன் குறைந்த குழந்தைகளையும் சேர்க்க வேண்டும்" என, வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையிலான, கல்வி அடிப்படை உரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.