தமிழகம் முழுவதும் பொறியியல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தனித்தனியாக இயங்கி வந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைத்ததில் இருந்து, பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு பல்கலையிலும், ஒவ்வொரு பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரே பல்கலையின் கீழ் இணைத்தது, நிர்வாக ரீதியாக பல்வேறு கடும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்தும் பொறுப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கு வந்துள்ளது. மாணவர்களைப் பற்றிய விவரங்கள், பாடத்திட்டங்கள் என எதுவுமே சரியான முறையில் கிடைக்காததால், தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான எழுத்துத்தேர்வு அட்டவணை திருத்தியமைக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.