சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே, கோர்ட் உத்தரவுப்படி, இடைக்கால ஏற்பாடாக, 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். வழக்கு தொடராத பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி பிறப்பித்துள்ளார்.
அவரது அறிக்கை: தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக் கட்டணத்தை எதிர்த்து, சில பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில், 2ம் தேதி ஐகோர்ட் தீர்ப்புக் கூறியது. ரவிராஜ பாண்டியன் தலைமையிலான பள்ளி கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை எதிர்த்து, கடந்த 2ம் தேதிக்குள் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே, 2012-13 கல்வியாண்டுக்கு மட்டும் இடைக்கால ஏற்பாடாக, 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள், கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தனியாகவும், கோர்ட் உத்தரவுப்படி உயர்த்தப்பட்ட 15 சதவீத கட்டணத்தை தனியாகவும் குறிப்பிட்டு, மாணவர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை, பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
இவ்வாறு கட்டணம் வசூலிப்பது, கட்டண நிர்ணயக்குழுவின் இறுதி ஆணைக்கு உட்பட்டது என்பதையும் அதில் தெரிவிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு தொடுக்காத பள்ளிகள், கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
வழக்கு தொடர்ந்த பள்ளிகள், ஏற்கனவே நிர்ணயித்த கட்டணம் மற்றும் 15 சதவீத கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த அறிவுரைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது, துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.