எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க, அடுத்த கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகாதாரத்துறை தொடர்பான எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க அடுத்த கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அறிவிக்கை, இந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு, "NEET-UG"யை சி.பி.எஸ்.இ., அமைப்பு நடத்தும்.
எம்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வான "NEET-PG"யை, தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும். எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, மாணவர்கள் பலவிதமான தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் சேர்க்கையில், தகுதி அடிப்படையிலான சேர்க்கையை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொது நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிக்கையை, இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னர் வெளியிட்டது. நடப்பு கல்வியாண்டில் இருந்தே நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், சில ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என்பதால், அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...