பட்டதாரிகள் சி.ஏ. படிக்க விரும்பினால் இனி நுழைவுத் தேர்வு (Common Proficiency Test-CPT) எழுதத் தேவையில்லை. நேரடியாகவே சி.ஏ. படிக்கலாம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
சி.ஏ. (Chartered Accountant) எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பிற்கு, சி.பி.டி (Common Proficiency Test) நுழைவுத் தேர்வு, ஐ.பி.சி.சி. (Integrated Professional Competency Course)தேர்வு, ஃபைனல் எனப்படும் இறுதித் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. படிக்க விரும்பினால் சி.பி.டி. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
இந்நிலையில் பட்டதாரிகள் சி.பி.டி. நுழைவுத் தேர்வு எழுதாமல் நேரடியாகவே ஐ.பி.சி.சி. இன்டர் தேர்வை எழுத உதவும் வகையில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் (Institute of Chartered Accountants of India - ICAI) ‘போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்’ அரசிடம் ஒப்புதல் கேட்டிருந்தது. தற்போது அந்த ஒப்புதல் கிடைத்துவிட்டதால், விரைவில் இந்த முறை அமலுக்கு வரவுள்ளது.
“ஜூன் இறுதிக்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் நேரடியாகவே ஐ.பி.சி.சி. நிலையில் சி.ஏ. படிப்பை தொடர முடியும். வணிகவியல் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அறிவியல் பிரிவு மாணவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்” என்கிறார் ஐ.சி.ஏ.ஐ.யின் ‘போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்’ தலைவர் நீலேஷ் விகம்சே.
“சி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் நடைபெறவுள்ள சி.பி.டி. நுழைவுத் தேர்வு எழுத, அந்தத் தேர்வு நடக்கும் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பே ஐ.சி.ஏ.ஐ. அமைப்பில் பதிவு செய்திருக்கவேண்டும். பட்டதாரிகள் பட்டப் படிப்பை முடிக்க ஜூலை அல்லது செப்டம்பர் மாதம்கூட ஆகலாம். அதற்குப் பிறகு அவர்கள் பதிவு செய்து, இரண்டு மாதங்கள் காத்திருந்து சி.பி.டி. தேர்வை எழுதுவதற்குப் பதிலாக நேரடியாகவே ஐ.பி.சி.சி. தேர்வை எழுத வகை செய்யும் விதத்தில் புதிய நடைமுறை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.சி.சி. தேர்வு மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது” என்கிறார் சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்து வரும் ஆர்.நாகராஜன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...