தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகள் 318 க்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்தப் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதில் அதிருப்தியடைந்த 6,400 பள்ளிகள், குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்தன. இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன் குழுவில் இருந்து விலகினார்.
எதிர்ப்பு: இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அப்பீல் செய்த பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, கடந்த ஜூன் மாதம் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் 318 தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன.
மனுக்களில், "எங்கள் தரப்பு முறையீடுகளை கேட்கும்போது, போதிய சந்தர்ப்பத்தை குழு அளிக்கவில்லை. இயற்கை நீதி மீறப்பட்டது. கல்வி நிறுவன வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு உபரித் தொகையை ஒதுக்கி, கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. அதிக கட்டணம் இருந்தாலோ, லாப நோக்கில் இருந்தாலோ, அதுபற்றி குழு ஆராயலாம். பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு விவரங்களை குழு பரிசீலிக்கவில்லை" என கூறப்பட்டது.
உத்தரவு: இம்மனுக்களை நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, முத்துகுமாரசாமி மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்.சுரேஷ்குமார், ரபுமனோகர், தங்கசிவன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, குழுவானது சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதேநேரத்தில் பள்ளிகள் தரப்பில் ஆட்சேபங்கள், ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. எனவே, போதிய சந்தர்ப்பத்தை பள்ளிகள் தரப்பில் ஆஜரான பிரதிநிதிகளுக்கு குழு வழங்கியிருக்க வேண்டும்.
தங்களுக்குப் போதிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதுதான் மனுதாரர்களின் குறை. மனுதாரர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை பள்ளிகளை நடத்தி வருகின்றனர். சிறுபான்மை பள்ளிகளுக்கு, அந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமை, முழுமையானது. சிறுபான்மைப் பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமையில், அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. சீர்மிகு கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கு, அரசு வேண்டுமானால் வழிமுறைகளை கூறலாம்.
உபரி தொகை: ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, அரசு உதவிபெறாத தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, 10 முதல் 15 சதவீதம் உபரித் தொகையை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, பள்ளி வளர்ச்சிக்காக குழு நிர்ணயித்த உபரித் தொகையானது, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள சதவீதத்துக்கு இணையாக இல்லை.
எனவே, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து, குழு பிறப்பித்த உத்தரவுகள் மனுதாரர்களைப் பொறுத்தவரை ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் புதிதாக கல்விக் கட்டணத்தை குழு நிர்ணயிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி, விவரங்களைப் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளி தரப்பிலும் தனிப்பட்ட முறையில் குழு விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய சந்தர்ப்பம் வழங்க வேண்டும். டிசம்பருக்குள் இறுதி உத்தரவை, குழு பிறப்பிக்க வேண்டும்.
உரிமை: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தால், பெரும்பாலான பள்ளிகள் நிதி பிரச்னையை சந்திக்கின்றன. குழுவிடம் இருந்து இறுதி உத்தரவு வரும் வரை, மனுதாரர் பள்ளிகள், குழு நிர்ணயித்த கட்டணத்தில் இருந்து சராசரி 15 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க உரிமையுள்ளது. மனுதாரர் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த இடைக்கால ஏற்பாடு. மற்ற பள்ளிகளுக்கு அல்ல. இந்த உயர்த்தப்பட்ட கட்டணமானது, குழு பிறப்பிக்கும் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்.
நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடராத பள்ளிகள், இந்த இடைக்கால ஏற்பாட்டின் பலன்களை கோர முடியாது. இடைக்கால ஏற்பாட்டின் பலன்களை பெறுவதற்கான கட்-ஆப் தேதி கடந்த 2ம் தேதி. அதாவது, கடந்த 2ம் தேதி வரை மனுத் தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமே, இடைக்கால பலன்களை கோர உரிமையுள்ளது. அதுவும், அந்த ரிட் மனுக்களில் இறுதி உத்தரவு வழங்கிய பின்தான்.
காரணம்: அரசு உதவி பெறாத சிறுபான்மை அல்லாத பள்ளிகள் அனைத்தும், வளர்ச்சிக்கான உபரி நிதியாக, கிராமம் மற்றும் நகரப் பஞ்சாயத்து என்றால் 10 சதவீதம், நகராட்சி மற்றும் மாவட்டத் தலைநகரங்கள் என்றால் 12 சதவீதம், மாநகராட்சி என்றால் 15 சதவீதம் வைத்துக்கொள்ள உரிமையுள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அளிக்கும் ஆடிட்டர் அறிக்கையை குழு ஏற்றுக் கொள்ளலாம். ஏற்கவில்லை என்றால், அதற்கான காரணங்களை பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் போதிய சந்தர்ப்பம் வழங்கி, இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளிகளின் மத மற்றும் கலாசாரத்துக்கான செலவில், குழு குறுக்கிடக் கூடாது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.