Home »
» பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் கல்வித் துறை சார்பில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வகுப்புகள் வாரியாக ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, உபரியாக உள்ள ஆசிரியர் விபரம், காலியிடங்கள் விபரம், கூடுதலாக தேவைப்படுகிற ஆசிரியர்கள் ஆகியன சேகரிக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த பட்டியல் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முன் பள்ளி அளவில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், இவ்வாறு நிரப்பப்பட உள்ளது.
உபரி ஆசிரியர்கள் அருகில் உள்ள பிற பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு நியமிக்கப்படுவர். இதனை தொடர்ந்து ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஆசிரியர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
சென்னையில் மே 15,16 தேதிகளில் முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஆன்லைன் முறையில் பள்ளிகளிலேயே பிளஸ் 2, 10ம் வகுப்பு கல்வி தகுதி பதிவு செய்யும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப் படுகிறது. அத்துடன் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்தும் ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி : திரு. அருணாச்சலம் அவர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...