இப்போதெல்லாம் பாடப்புத்தகங்களை ஆசிரியர்களும் மாணவர்களும் படிப்பதைக் காட்டிலும் அரசியல்வாதிகள்தான் அதிகம் படிக்கின்றார்கள் என்பதைத் தற்போது நடைபெற்றுவரும் எதிர்ப்புகளும், எதிர்வினைகளும் தெளிவுபடுத்துகின்றன.
கார்ட்டூனிஸ்ட் சங்கர் எப்போதோ வரைந்த ஒரு கேலிச்சித்திரம், மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான (என்சிஇஆர்டி) பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் செயல்பட முடியாமல் முடங்கி, மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபல் மன்னிப்பு கேட்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கார்ட்டூன் இடம்பெற்ற அனைத்துப் புத்தகங்களும் திரும்பப்பெறப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
பண்டித ஜவாஹர்லால் நேரு, "பாபா சாகேப்' அம்பேத்கர் இருவருக்கும் கார்ட்டூனிஸ்ட் சங்கர் நல்ல நண்பர். இரு மாபெரும் ஆளுமைகளும் இந்தக் கேலிச் சித்திரத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்களே தவிர, சங்கருடன் கருத்து மாறுபாடு கொள்ளவில்லை. ஆனால், இன்று இந்த கார்ட்டூன் ஒரு களங்கமாகப் பார்க்கப்படுவதன் காரணம் அன்று போற்றப்படும் தலைவர்களாக இருந்த நேருவும், அம்பேத்கரும் இன்று வணங்கப்படும் தலைவர்களாகி அவர்கள் பெயரால் பலர் அரசியல் நடத்தும் நிலைமை ஏற்பட்டிருப்பதுதான்.
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், சங்கர் வரைந்த கார்ட்டூன்களைப் புத்தகமாகப் போடக்கூடாது என்றோ, அவற்றை மறுபிரசுரம் செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. அவை பாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்று மட்டுமே சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அவர்கள் கருத்தில், உணர்வில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அடுத்த தலைமுறையினர் மனத்தில் போற்றுதலுக்குரிய அந்தத் தலைவர்கள் பற்றிய தவறான மதிப்பீடு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அவர்களது அச்சம் நியாயமானதுதான்.
இதேபோன்று இன்னொரு பிரச்னை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் மேனிலைப் பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ சித்தாந்தத்தின் நிறுவனர்களான கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோர் குறித்த பகுதிகள் நீக்கப்படும் என்று அறிவித்தபோது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்குப் பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு முதல்வர் மம்தா அளித்த விளக்கம்: "மார்க்ஸýம் எங்கெல்ஸýம் எங்களுக்கு ஒன்றும் வேண்டாதவர்களோ, தீண்டத்தகாதவர்களோ அல்ல. ஆனால், பாடப்புத்தகம் பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்'. இதுவும் நியாயமான விளக்கம்.
சென்ற ஆண்டு, தில்லி பல்கலைக்கழகத்தில் ராமாயணம் படாதபாடு பட்டது. கவிஞரும், சங்கப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்தவருமான ஏ.கே. ராமானுஜன் எழுதிய, "முந்நூறு இராமாயணம்..' என்ற ஆங்கிலக் கட்டுரையை கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும் ரகளை நடைபெற்றது.
இந்தக் கட்டுரை ராமகாதை எவ்வாறெல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது, அல்லது திரிபு அடைகிறது என்பதைப் பற்றியது. கிரேக்க காவியம் தொடங்கி, வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், கம்பராமாயணம் என்று இந்தியாவில் உள்ள பல ராமாயணங்களையும் அவற்றின் கதை மாறுபாடுகளையும், தாய்லாந்து நாட்டில் எவ்வாறு ராமாயணம் தற்போது வடிவம் கொண்டுள்ளது என்பதையும் விவரிக்கும் கட்டுரை இது. இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதன் விளைவாக, ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் அந்தக் கட்டுரையை, ராமானுஜன் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்தே எடுத்துவிட்டது. அதுமட்டுமல்ல, இனி அக்கட்டுரையை அந்நூலில் சேர்க்க மாட்டோம் என்றும் தில்லி பல்கலைக்கழகத்துக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
பல மொழி, பல இனம், பல்வேறு கலாசாரம், பலவித வழிபாட்டு முறைகள் என்று பல வகையாலும் பிரிந்து நின்று, ஆனாலும் உணர்வால் ஒன்றாக நிற்பதுதான் பாரதத்தின் பலம்; தனித்துவம். இந்தியக் கலாசாரம் எல்லா மாறுபாடுகளையும் உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறது. இடம் அளிக்கவும் செய்கிறது. ஆகவே, பாடப்புத்தகம் என்று வரும்போது அது பொதுவானதாக இருந்தாகவேண்டும் என்பதைத்தான் இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.
சமூகவியல், வரலாறு பாடப்புத்தகங்களில் மட்டும்தான் அண்மைக்காலமாக இத்தகைய முரண்கள் நேரிட்டுள்ளன. இதற்குக் காரணம், பாடப்புத்தகங்களைத் தயாரிப்பவர்கள் அரசியல் விசுவாசிகள் என்பதுதான். வருங்காலச் சந்ததியரை வழிநடத்தத் தேவையான கல்வித் திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஏதுவான பாடத்திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் தயாரிப்பதை எந்தவித அரசியல் சார்பும் இல்லாத கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைப்பதை விட்டுவிட்டு, ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக இருந்தால் மட்டுமே கல்வித் துறையில் உயர் பதவிகளில் நியமனம் என்கிற இழிநிலை ஏற்பட்டுவிட்டதன் வெளிப்பாடுதான் இவையெல்லாம்.
தங்களது அரசியல் சார்பை ஆசிரியர்கள் மாணவர்களின் மீது திணிப்பது எவ்வளவு தவறோ அதேபோலத்தான் எதிர்மறைக் கருத்துகளைப் பாடமாகச் சேர்ப்பது. வரலாறு, சமூகவியல் தொடர்பான பாடங்களை மட்டும் புத்தகத்தில் தந்துவிட்டு, அது தொடர்பாகப் படிக்க வேண்டிய நூல் பட்டியலை ஒவ்வொரு பாடத்துடனும் இணைத்திருந்தால் இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது.
பாடத்திட்டத்தைப் பொதுவாக வைப்போம். பாடபேதங்களின் பட்டியலை இணைப்போம். தேடல் உள்ள மாணவர்கள் தாமாகவே தேடி அடையட்டுமே...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...