திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பிற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 4) முதல் வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். சண்முகையா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2013 பிரிவில் மொத்தம் ஆயிரம் இடங்கள் உள்ளன. தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில் 500 இடங்களும் உள்ளன.
தமிழகம் முழுவதும் 11 ஒருங்கிணைப்பு மையங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி, கோவையில் எஸ்.என்.ஆர். கல்லூரி உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. ரூ.500 பணமாகச் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் பெற ரூ.550 வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15 என்ற பெயரில் எடுத்து பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணாசாலை, சென்னை-15 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 26-ல் நடைபெறும் என்று பதிவாளர் சண்முகையா தெரிவித்துள்ளார்.