தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக
பதவி உயர்வு செய்யப்படுகின்றனர். இதில் இடைநிலை உடற்கல்வி மற்றும்
சிறப்பாசிரியர்களிடமிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு
தற்காலிக சீனியாரிட்டி பட்டியலில் 1,227 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல், பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை அரசு மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குனர் 2 பணியிடங்களில் இருந்து சீனியாரிட்டி பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 638 பேர் இடம்
பெற்றுள்ளனர்.
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற அரசு
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல்
தயாரிக்கப்பட்டு இதில் 215 பேர் இடம் பெற்றுள்ளனர். நகராட்சி மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேர்
இடம் பெற்றுள்ளனர்.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதியான
நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சீனியாரிட்டி பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 18 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக பதவித உயர்வு
வழங்கப்படுகிறது. மேலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் இருந்து
மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற தயாரிக்கப்பட்டுள்ள சீனியாரிட்டி
பட்டியலில் (17.1.2006 வரை) 82 பேர் இடம் பிடித்துள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் இருந்து மாவட்ட கல்வி
அலுவலர்களாக பதவி உயர்வு பெற தயாரிக்கப்பட்டுள்ள சீனியாரிட்டி பட்டியலில்
(20.4.2001 வரை) 63 பேர் இடம் பிடித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களில்
இருந்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுபெற
தயாரிக்கப்பட்டுள்ள சீனியாரிட்டி பட்டியலில் (18.1.2002 வரை) 2,416 பேர்
இடம் பிடித்துள்ளனர்.
முதுகலை ஆசிரியர்களில் இருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக பதவி
உயர்வு பெற தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் (14.12.2011 வரை) 181 பேர் இடம்
பெற்றுள்ளனர். தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை
ஆகியவற்றின் கீழ் பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மேல் இந்த கல்வி
ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்பதால் ஆசிரிய, ஆசிரியைகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.