பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம்களில், அதிக விடைத்தாள்களை திணிப்பதால், திருத்தம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 66 முகாம்களில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு காலை 15 , மாலை 15 என, 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும்.
இதன் பணிகளை விரைந்து முடிக்க, காலை 20 , மாலை 20 என ,40 விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் வழங்குகின்றனர்.
இதனால் அவசரமாக திருத்தம் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தில் போதிய அனுபவம் இல்லாத நிலையில் தாமதமும் ஏற்படுகிறது.
அவசரம் காரணமாக தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளதால், மாணவர்களும் பாதிக்கும் நிலை உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர்கள் கழகத்தினர் கூறுகையில், "ஆசிரியர்களிடத்தில் விடைத்தாள்களை திணிக்க கூடாது. அதிக ஆசிரியர்கள் தேவை என்றால், கூடுதல் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும். குறைந்த விடைத்தாள் மையங்களுக்கு அதிக விடைத்தாள்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்," என்றனர்.