Home »
» 15% கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதியுள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்: தமிழக அரசு.
கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதி உள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான மனுவை மாநில பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் எஸ். வேதரத்தினம் சார்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி. சஞ்சய் காந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது: நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து சில தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மே 3-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், நீதிமன்றத்தை அணுகியுள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பற்றி கல்விக் கட்டண நிர்ணயக் குழு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதற்கிடையே நடப்புக் கல்வியாண்டுக்காக கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தக் கட்டணத்தைவிட 15 சதவீத கூடுதல் கட்டணத்தை அந்தப் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம்.
மேலும், இந்த உத்தரவின்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பள்ளிகள் மட்டுமே 15 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும், சில ஊடகங்களில் நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்பு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும், பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை அணுகாத பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதியுள்ள பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், அந்தப் பள்ளிக்கு கட்டண நிர்ணயக் குழுவால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டக் கட்டணம், நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு மூலம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ஆகியவை பள்ளி அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட வேண்டும்.
இந்தக் கட்டண வசூல் என்பது, கட்டண நிர்ணயக் குழுவின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதும், ஒருவேளை குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்திருந்தால் எதிர்காலத்தில் திருப்பித் தரப்படும் என்பதையும் பெற்றோருக்குத் தெரியப்படுத்திட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு உட்படாத பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு ஏற்கெனவே நிர்ணயித்தக கட்டணத்தை மட்டுமே வசூலித்து, அதற்கான ரசீதை பெற்றோருக்கு தர வேண்டும்.
ஆகவே, கடந்த மே 3-ம் தேதி பிறப்பித்த தீர்ப்புடன் சேர்த்து மேற்கண்ட விளக்கங்களும் இடம்பெறும் வகையில் உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.