தமிழக விளையாட்டுப் பள்ளி, விடுதியில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி, விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவிகள் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தாண்டு பள்ளி விடுதி மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய இரண்டு கட்டமாக தேர்வு நடக்கிறது. அதில், முதல் கட்டமாக மாவட்ட அளவிலும், இரண்டாம் கட்டமாக மாநில அளவிலும் நடக்கிறது. மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கல்வியுடன், உணவு, தங்குமிடம், விளையாட்டுச் சீருடை, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி, நீச்சல், வாலிபால், குத்துச்சண்டை, டேக்வோண்டா, வாள் சண்டை, கைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், இறகுப்பந்து, பளு தூக்குதலும், மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, வாள் சண்டை, டென்னிஸ், பளுதூக்குதல் ஆகிய போட்டிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் விடுதியில் சேர மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணபங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் ஏப்ரல் 25ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.