பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய விடைத்தாள் திருத்தும் மையங்களை, மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், இந்தாண்டு, 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவற்றுடன், ஆண்டுதோறும் உடனடி தேர்வு, அக்டோபர் மாதத் தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், இந்த தேர்வுகளை, 25 லட்சம் பேர் வரை எழுதுகின்றனர்.
இவற்றை திருத்தும் முக்கிய பணி, தேர்வுத் துறையினருக்கு உள்ளது. தமிழக தேர்வுத்துறை, ஆசியாவில் பெரிய துறையாக இருந்தபோதும், ஊழியர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது.
25 லட்சம் விடைத்தாள்கள்
குறைந்த ஊழியர்கள் மூலம், உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் உதவியுடன், ஆண்டுக்கு 25 லட்சம் விடைத்தாள்களை திருத்துவதுடன், மதிப்பெண்கள் வழங்குவது முதல் திருத்தப்பட்ட தாள்களின் ஜெராக்ஸ் காப்பி கொடுக்கும் பணிகள் வரை நடக்கின்றன.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள், மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. &'கட் ஆப்&'பில், 5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, மருத்துவம், பொறியியல் படிப்பு வாய்ப்புகளை மாணவர்கள் இழக்க நேரிடும்.
தற்போது, மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்படும் விடைத்தாள் திருத்தும் மையங்களில், போதிய விளக்குகள், கழிப்பறைகள், மின் விளக்குகள், மின் விசிறிகள், இருக்கைகள் போன்றவை இல்லாமல், ஆசிரியர்கள் அவதியுறுகின்றனர்.
மையங்களில் ஆசிரியைகளுக்கு, &'ரெஸ்ட் ரூம்&' வசதி இல்லை. மன உளைச்சலுடன் மாணவர்களின் விடைத்தாள்கள், ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன. இதற்காக, மாவட்டங்கள்தோறும், தேர்வுத் துறை சார்பில், விடைத்தாள்கள் திருத்துவதற்கான தனி மையங்கள் ஏற்படுத்தி, ஆசிரியர்கள் அமைதியான சூழலில் திருத்த வழிசெய்ய வேண்டும் என, நீண்ட நாட்களாக ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருத்தும் பணியில் ஈடுபடும் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 24 பேப்பர்கள் தரப்படுகின்றன. இதை, 20 ஆக குறைத்தால், திருத்தும் பணி இன்னும் தெளிவாக இருக்கும். திருத்துவதற்கான நாள் சம்பளம் (ஒரு பேப்பருக்கு) ரூ.15 ஆக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.