அரசு சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் பி.வளர்மதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:மாற்றுத் திறனாளிகளுக்கென 23 அரசு சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிரத்து 720 மாணவர்களும், சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சி பிரிவில் 55 மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டு முதல் அவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள் ரூ.14.31 லட்சம் செலவில் வழங்கப்படும்.
உணவு மானியம்-ரொக்கப் பரிசு அதிகரிப்பு: தமிழகத்தில் 23 அரசு மற்றும் 54 அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 9 ஆயிரத்து 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் உணவூட்டுச் செலவினமாக ரூ.450 இப்போது வழங்கப்படுகிறது. இது, ரூ.650 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.5.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றால் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ரொக்கப் பரிசு உயர்த்தப்படுகிறது.அதன்படி, மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், 2-ம் இடம் பெறுவோருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், 3-ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் ரொக்கப் பரிசு உயர்த்தி வழங்கப்படும்.இதேபோன்று, 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், 2-ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், 3-ம் இடம் பெறுவோருக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் ரொக்கப் பரிசு அதிகரிக்கப்படும்.மாற்றுத் திறனுடையோருக்கு உதவுவோருக்குச் சலுகைகள்: மாற்றுத் திறனாளிகள் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்குச் செல்வர். அவர்களுடன் ஒரு துணையாள் சென்றால் அரசு பஸ்களில் பயணம் செய்ய பயணச் சலுகை வழங்கப்படும்.இந்தத் திட்டத்தினால் 32 ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயன்பெறும் சுமார் 2 ஆயிரத்து 390 மாணவர்களின் பெற்றோர் பயன் பெறுவர். மேலும், இந்தத் திட்டத்துக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.100 என்ற வகையில் இப்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.250 ஆக உயர்த்தி அளிக்கப்படும். இதன் மூலம் 500 மாணவர்கள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.27.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.இடை நிறுத்தத்தைத் தடுக்க...: அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, முதல் பிளஸ் 2 வரையில் சுமார் 1,400 குழந்தைகள் படித்து வருகின்றனர்.அவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு தலா ரூ.1,500-ம், பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.22.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரத்து 14 சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.12.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் வளர்மதி.