சென்னை: தமிழ்நாடு போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
தமிழக போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கணிசமான அளவு காலியிடம் அதிகரித்துள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம், கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, போலீசில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறைத்துறை, தீயணைப்புத் துறையினர் உட்பட, 13 ஆயிரத்து 320 பேர் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்வில் கலந்துகொள்ள, விண்ணப்பங்கள், அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 23ம் தேதி மாலை, 5:45க்குள், தேர்வுக் குழுமத்திற்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க ஏதுவாக, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும், 30ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை, சீருடை பணியாளர் தேர்வு குழுமத்திற்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற அறிவுரைகள் தகவல் சிற்றேட்டில் கொடுத்துள்ளபடி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.