சத்துணவு ஊழியர்கள் நியமனத்துக்கு அரசு விதித்த நிபந்தனை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், ஆயாக்கள் பணியிடங்களுக்கு சத்துணவு மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருப்பவர்களைதான் நியமிக்க வேண்டும் என்று 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இது சட்ட விரோதமானது. குறிப்பிட்ட இடத்துக்குள் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில், வேறு மாவட்ட த்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். இதனால் பல இடங்கள் காலியாக உள்ளது. இந்த அரசாணையினால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், “அரசாணை செல்லாது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது” என்று தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி, “சத்துணவு மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளவர்களை நியமித்தால்தான் குழந்தைகளுக்கு பழகிய முகமாக இருக்கும். மையத்துக்கு உரிய நேரத்தில் வருவார்கள். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “சத்துணவு மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வசிப்பவர்களை சத்துணவு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பு கூறினர்