சென்னை: தமிழகத்திலுள்ள 51 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில், 299 கூடுதல் படிப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இத்தகவலை, தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் பழனியப்பன் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது: 51 கல்லூரிகளில், இந்த கூடுதல் படிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், புதிதாக 841 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியிருக்கும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 3,120 ஆசிரியர் பணியிடங்களையும், 1,758 ஆசிரியரல்லாத பணியிடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகம் - வணிகம் கூட்டு மையங்களை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் கல்விதொடர்பான எழுதுதலுக்கான மையங்களை அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான பன்மை - இசைவு உபகரண தயாரிப்பு மையத்தை ஏற்படுத்தல், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களுடன், அறிவாற்றலுக்கான PG மையங்கள் மற்றும் இன்குபேஷன் மற்றும் தொழில்நுட்ப மையங்களை பல்கலைக்கழகங்களில் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை அரசு மேற்கொள்ள உள்ளது.
இதைத்தவிர, கற்றலில் சிரமமுள்ள மாணவர்களின்பால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அவர்களின் கல்லூரி இடைநிற்றல் தவிர்க்கப்படும். மாணவர்களின் பலவித திறன்களை மேம்படுத்த மென்திறன் மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், மாணவர்களின் அலுவலக திறமைகள் மேம்படுத்தப்பட்டு, அவர்கள் பணி வாய்ப்புகளை பெறுவது எளிதாக்கப்படும். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் அரசு கம்யூனிட்டி கல்லூரிகள் தொடங்கப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இதுவரை சுமார் 1.74 லட்சம் இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில், ரூ.1500 கோடியை 2.12 லட்சத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்களை வழங்க, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்