சென்னை: கடினமான இயற்பியில் தேர்வால், இந்தாண்டு மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்தால், நடப்பாண்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இதன்மூலம் கடந்தாண்டு மருத்துவ இடம் கிடைக்காமல், வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அதைவிட்டுவிட்டு, மீண்டும் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், நடப்பாண்டில், மருத்துவப் படிப்புக்கு வாய்ப்பு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து எழுந்துள்ளது. கடந்த 2006 மார்ச் முதல் நடந்து வரும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட இயற்பியல் தேர்வின், 18 வினாத்தாள்களை புரட்டிப் பார்த்தால், இந்த வருட வினாத்தாள் கடினம் என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயம்தான்.
விடை இல்லை: முந்தைய தேர்வுகளில், 1 மதிப்பெண் வினாக்கள், 30ல், 20-23 வினாக்கள், பாடத்தின் கடைசி பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. இதைப் போலவே, 3 மதிப்பெண் வினாக்கள், குறிப்பாக கணக்கு வினாக்கள், புத்தகத்திலிலுள்ள எடுத்துக்காட்டு அல்லது பயிற்சி வினாக்களிலிருந்துதான் கேட்கப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாண்டு, 1 மதிப்பெண் வினாக்களில் 17, பாடத்தின் கடைசி பகுதியிலிருந்தும்; மற்றவை, சூத்திரங்களை பயன்படுத்தியும், சிந்தித்து விடை அளிக்கும் வகையில் இருந்தன. சமச்சீர் கல்வி நடைமுறையில் இம்மாதிரி மாற்றம் வந்திருக்கிறதோ என்றால், அதற்கு சரியான விடை கிடைக்கவில்லை.
பின்னோக்கி செல்வர்: மாணவர்களில் பலர், மருத்துவர் ஆக விரும்பி, இயற்பியலைத் தேர்வு செய்கின்றனர். மருத்துவ கட்-ஆப் மார்க்கில், உயிரியல், வேதியியல் தவிர, இயற்பியலும் பங்கு வகிக்கிறது. ஒரு மதிப்பெண் இதில் குறைந்தாலும், 0.25 மதிப்பெண் கட்-ஆப் குறையும். தரவரிசையில், 50 மாணவர்களுக்கு அடுத்தபடியாக, பின்னோக்கி தள்ளப்படுவர். கடந்த 2011ல், இயற்பியலில், எப்போதும் இல்லாத அளவில், 630 மாணவர்கள், சென்டம் எடுத்தனர்.
கடந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர, பி.சி., பிரிவினருக்கு, கட்-ஆப் 197.25; எம்.பி.சி.,க்கு, 196.25 என, நிர்ணயிக்கப்பட்டது. இயற்பியல் பாடத்தால், இவ்வாண்டு மருத்துவ கட்-ஆப், 0.50 மதிப்பெண்ணுக்கு மேல் குறைந்தால், கடந்த ஆண்டு, மருத்துவ படிப்பு கிடைக்காமல், வேறு பாடப் பிரிவுகளில் படித்து வரும் மாணவர்கள், அதை விட்டுவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரக்கூடும். இதனால், நடப்பாண்டு மாணவர்கள் பலருக்கு, மருத்துவ வாய்ப்பு பறிக்கப்படலாம்.
அநீதியாக அமையும்: ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ கட்-ஆப், அதற்கு முந்தைய ஆண்டை விட உயர்ந்து கொண்டே வந்ததால், அந்தந்த ஆண்டின் மாணவர்களே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவில் சேர்ந்தனர். இவ்வாண்டு, கட்-ஆப் 1 மதிப்பெண் குறையுமானால், அரசு மருத்துவக் கல்லூரிகளில், 25 சதவீத இடத்தை, கடந்தாண்டு மாணவர்களே நிரப்பி விடுவர். அப்படி நேர்ந்தால், அது, இவ்வாண்டு மாணவர்களுக்கு, கடினமாக இருந்த இயற்பியல் தேர்வால் இழைக்கப்படும் அநீதியாக கருதப்படும்.
அரசு சிந்திக்குமா?: கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, மருத்துவப் படிப்பிற்கு, நுழைவுத் தேர்வு கூடாது என, தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. மேலும், மத்திய அரசின் நுழைவுத்தேர்வு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தவிர, இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும், அதன் மதிப்பெண்ணையும், சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை தேவை: பொதுவாக, இயற்பியல் மட்டுமல்லாமல், எல்லா பாடங்களின் கேள்வித்தாள்களும், சிந்தித்து விடை அளிக்கக்கூடிய சி.பி.எஸ்.சி., பாணியில் அமைவது, மிகவும் வரவேற்கத்தக்கது. கல்வித் தரத்தை உயர்த்தும் திறமையான மருத்துவர்கள் உருவாக வழி வகுக்கும்.
ஆனால், அந்தந்த ஆண்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, கடந்தாண்டு மாணவர்களின், கட்-ஆப் மதிப்பெண்ணால் பாதிக்காமல் இருக்கும் வகையில், விதிமுறைகள் வகுக்க வேண்டும். அரசும், கல்வித் துறையும் இதில் கவனம் செலுத்தி, நடப்பாண்டு மாணவர்களின் மருத்துவ வாய்ப்பை பாதுகாக்க வேண்டும்