புதுடில்லி: தனியார் பள்ளிகளில் படிக்கும் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இலவசங்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷிக்ஷாக் சங்கம் என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு மதிய உணவுத் திட்டம், இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடைகள் வழங்குவது போன்ற திட்டங்களை, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அமல்படுத்தியள்ளது.
ஆனால், அரசு உதவிபெறாத, அதே நேரத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்தால், பலன் அடைவதில்லை.
இது அரசியல் சட்டத்தின், 14 மற்றும் 15வது பிரிவை மீறிய செயல். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் விதிகளும் குழப்பமாக உள்ளன. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் லோதா மற்றும் கோகலே ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது.