பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக 10 நடமாடும் மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
பேரவையில் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சுற்றுப்புறச் சூழல், குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் மாற்றங்கள், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களால் கலக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உளவியல் ஆலோசனைகள் வழங்கும் வகையில் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.